Home Tamil Christian Prayers பாவசங்கீர்த்தனம் செய்யும் முறை

பாவசங்கீர்த்தனம் செய்யும் முறை

Confession guide in Tamil

பாவசங்கீர்த்தன முறை

குருவானவரிடத்தில் போய் முழங்காலிலிருந்து சிலுவை வரைந்து “சுவாமி நான் பாவியாயிருக்கிறேன், என்னை ஆசீர்வதித்தருளும்” என்று அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றபின் சாதாரண பாவசங்கீர்த்தன மந்திரத்தை துவக்கி மார்பில் பிழைதட்டி: “என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே” என்கிற வார்த்தைகளைச் சொல்லி நிறுத்தவும்.  

பின் முந்தின பாவசங்கீர்த்தனம் செய்து எத்தனை நாள் ஆனது என்றும் சொல்லிய பின், நீ கட்டிக் கொண்ட சாவான பாவங்களை ஒவ்வொன்றும் எத்தனை விசையென்றும், மற்ற அற்பப் பாவங்களையும் தாழ்ச்சியுடன் சுருக்கமாயும் தெளிவாயும் துக்கத்தோடு வெளிப்படுத்தி “நான் இப்பொழுது சொன்ன பாவங்களுக்காகவும், என் ஆயுள் காலத்தில் நான் செய்த சகல பாவங்களுக்காகவும் மனஸ்தாபப்படுகிறேன்” என்று சொல்லுகிறது.  

குருவானவர் சொல்லுகிற புத்திமதிகளையும், அவர் கொடுக்கிற அபராதத்தையும் கவனமாய்க் கேட்டபின் உத்தம மனஸ்தாப செபம் சொல்லி, குருவானவரின் ஆசீர்வாதத்தை சிலுவை அடையாளமிட்டுப் பெற்றுக்கொண்டு, இடத்திற்குப் போய், சர்வேசுரன் பாவப் பொறுத்தல் கொடுத்ததற்காக நன்றியறிந்த தோத்திரம்செய்து, குருவானவர் கொடுத்த அபராதத்தைக் கூடிய மட்டும் உடனே தீர்க்கிறது.

பத்துக் கற்பனைகள்

1.என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்

2.ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

3.உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

4. ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

5.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

6.கொலை செய்யாதிருப்பாயாக

7.விபசாரம் செய்யாதிருப்பாயாக

8.களவு செய்யாதிருப்பாயாக

9.பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக

மாதிரி ஆன்ம சோதனை

1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே. நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை 

  • எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளுக்கு முதலிடம் தந்தேனா?
  • பிற தெய்வங்களுக்குத் துதி பாடினேனா? வணங்கினேனா?
  • மாந்தரீகம், மூட நம்பிக்கை, ஜோதிடம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கு இடம் கொடுத்தேனா?
  • என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தை பிறர் முன் காட்டத் தயங்கினேனா?
  • துன்ப நேரத்தில் கடவுளுடைய அன்பு, பராமரிப்பில் நம்பிக்கை இழந்தேனா? 

2. கடவுளின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதே. 

  •  கடவுளுடைய திருப்பெயரை வீணாகச் சொல்லியிருக்கிறேனா?
  •  இறைவனின் ஆலயத்தை புனிதமாக மதிக்கத் தவறிஇருக்கிறேனா?

3. கடவுளின் நாள்களைப் புனிதமாக அனுசரி. 

  • ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் குறைந்த பட்ச முயற்சியாக திருப்பலி, திருவிருந்தில் பங்குகொள்ளத் தவறினேனா?
  • தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு கடவுளுக்கும், ஜெபிப்பதற்கும் அதிக நேரத்தை செலவுசெய்யத் தவறினேனா? 

4. தாய், தந்தையை மதித்துப் பேணு. 

  • என்னுடைய பெற்றேர்களுக்குத் தக்க மரியாதையை கொடுக்கத் தவறினேனா? பணிந்து நடக்காமல் இருந்தேனா? 
  • அவர்களை மதித்து நடந்தேனா? எக்காரியத்திலாவது நான் அவர்களை மனம் நோகச் செய்தேனா?
  • பெற்றோர்களின் வயதான காலத்தில் அல்லது அவர்களின் முடியாத காலத்தில் அவர்களை மாண்புடனும் என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு சௌரியங்களைச் செய்து கொடுத்து அன்புடன் நடத்தத் தவறியிருக்கிறேனா? கனிவுடன் பேசத் தவறியிருக்கிறேனா?
  • என்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுக்கத் தவறினேனா?
  • என்னுடைய குடும்பத்திலுள்ள அனைவருக்கும் என்னால் முடிந்தவரை உதவி செய்து கரிசனையோடு நடக்கத் தவறினேனா?
  • என்னுடைய அலுவல் மட்டில் என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு மதிப்புகொடுக்கத் தவறினேனா?
  • என்னுடைய குடும்ப அளவிலும் அலுவலக அளவிலும் என்னுடைய கடமையை செய்யத் தவறினேனா?

5. கொலை செய்யாதே. 

  • வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கு செய்தேனா?
  • பிறருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினேனா?
  • பிறரைப் பற்றி அவதூறு கூறினேனா?
  • பிறர் மனம் நோகும் படியாக தீய சொற்கள் பேசினேனா? 
  • யாரையாவது நான் வெறுத்து அவர்களுக்குத் தீயது நடக்கவேண்டும் என்று நினைத்ததுண்டா?
  • யார்மீதாவது பகைமையும் வஞ்சினத்தையும் நெஞ்சில் கொண்டு மன்னிக்க முடியாமல் இருக்கிறேனா? 
  • நேரடியாகவோ மறைமுகமாகவோ கருக்கலைப்புக்கு ஈடுபட்னேனா? உதவிசெய்தேனா?
  • தற்கொலை முயற்சி அல்லது எண்ணம் போன்றவற்றில் ஈடுபட்டேனா?
  • பிறருக்குத் துர்மாதிரியாக செயல்பட்டேனா? 
  • பிற உயிரினங்களை வதைத்தேனா? கொடுமையுடன் நடந்துகொண்டேனா?

6. மோக பாவம் செய்யாதே. 

  1. என்னுடைய நடை உடை பாவனைகளில் வீண் கவர்ச்சியைத் தேடியிருக்கிறேனா?
  2. தீய படங்களையோ, புத்தகங்களையோ படித்தேனா? பார்த்தேனா? 
  3. தீய எண்ணங்கள் தானாக மனத்தில் தோன்றியபோது அதை உடனடியாக விலக்கமல் இன்பம் அடைந்தேனா?
  4. என்னுடைய சொல்லாலும் செயலாலும் துர்மாதிரியாக நடந்தேனா? 
  5. என்னுடைய உடலை தூய ஆவியின் ஆலயம் என மதிக்காமல் சுய இன்பத்தில் ஈடுபட்டேனா? 
  6. பிறரை தவரான நோக்கோடு பார்த்தேனா? மனத்தில் எண்ணினேனா? பழகினேனா?
  7. பிறருடைய உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசினேனா? நடந்தேனா? பழகினேனா?
  8. திருமணம் ஆவதற்கு முன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
  9. திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துகிறேனா? 

7. களவு செய்யாதே. 

  • பிறருடைய பொருட்களுக்கு ஆசைப்பட்டிருக்கிறேனா? எடுத்திருக்கிறேனா?
  • கண்டெடுத்த பொருளை இன்னாரது பொருள் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
  • கண்டெடுத்த பொருளை உரியவரிடம் சேர்க்க தக்க முயற்சி செய்யாமல் தொடர்ந்து வைத்திருக்கிறேனா?
  • பிறருடைய பொருள்களையோ சொத்துக்களையோ வேண்டுமென்று சேதப்படுத்தியிருக்கிறேனா?
  • பிறருக்கு கொடுக்கப்பட வேண்டிய அல்லது சேர வேண்டிய பொருளையோ பணத்தையோ கபளீகரம் செய்துகொண்டிருக்கிறேனா?
  • சூதாட்டத்தில் ஈடுபட்டேனா?
  • களவு செய்யபட்ட பொருள் என்று தெரிந்தும் குறைந்த விலை என்பதற்காக வாங்கி களவு செய்தலை உற்சாகப்படுத்தினேனா?

8. பொய் சாட்சி சொல்லாதே. 

  • என்னுடைய சுயநலத்திற்காக பொய் சொல்லியிருக்கிறேனா?
  • பொய் என்று தெரிந்தும் அது உண்மை என்று வாதிட்டிருக்கறேனா? சாட்சி கூறினேனா?
  • பிறரைப்பற்றி புறணி பேசினேனா? 
  • அடுத்வர்களை கேலி, பரிகாசத்துக்குள்ளாக்கி இருக்கிறேனா? 
  • இரகசியம் காக்கப்படவேண்டிய உண்மைகளை தீய உள்ளத்துடன் வெளிப்படுத்தினேனா?
  • பிறர் செய்த குற்றத்தை அல்லது பாவத்தை பறைசாற்றினேனா? 
  • அடுத்தவர்களை தீர்ப்பிட்டேனா?

9. பிறர் தாரத்தை விரும்பாதே. 

  • திருமணத்திற்குப் பின் என் அன்பை வெளிப்படுத்த தவறிஇருக்கிறேனா?
  • மனைவியை வெறும் போகப் பெருளாக நடத்துகிறேனா?
  • கணவர் அல்லது மனைவிக்கு தக்க அன்பையும மரியாதையையும உரிமையையும் கொடுக்கத் தவறிஇருக்கிறேனா?
  • திருமண உறவிற்கு அப்பாற்பட்டு எனது சிந்தனைகளை வேறு ஒருவரிடம் செலுத்துகிறேனா?
  • என்னுடைய கணவர் அல்லது மனைவி தவிர்த்து பிறருடன் தவறான உறவில் ஈடுபட்டேனா?
  • என்னுடைய திருமண உடன்படிக்கையை மீறி வேறு நபருடன் உறவு வைத்துள்ளேனா?
  • தாம்பத்திய உறவில் திருச்சபையின் போதனையை மீறி நடந்திருக்கிறேனா?

10. பிறர் உடைமையை விரும்பாதே. 

  • அடுத்தவரிடம் காணப்படும் திறமைகளையும், செல்வத்தையும், நற்குணங்களைக் கண்டு பொறாமைப் பட்டேனா?
  • பிறரை ஏமாற்றி அல்லது நேர்மையற்ற முறையில் பணமோ பொருளோ சம்பாதித்தேனா?
  • பிறருடைய அறிவுசார்ந்த (காட்சி, இசை, மென்பொருள்) உடமையை தவரான முறையில் பயன்படுத்தினேனா? 

பிரதான கற்பனை

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல பிறனிடத்திலும் அன்பு

திருச்சபைக் கட்டளை

வருஷப் பாவசங்கீர்த்தனம் பண்ணாமலிருந்தது; பாஸ்கு காலத்தில் திவ்விய நற்கருணை வாங்காமல் போனது; விலக்கப்பட்ட நாட்களில் மாமிசம் சாப்பிட்டது.

தலையான ஏழு பாவங்கள்

1. ஆங்காரம்
2. கோபம்
3.  மோகம்
4.  லோபித்தனம் ( கஞ்சத்தனம்)
5.  போசனப்பிரியம்
6. காய்மாகாரம் (வஞ்சம் )
7. சோம்பல்

தலையான பாவங்களுக்கு எதிரான ஏழு புண்ணியங்கள்

1. தாழ்ச்சி
2.  பொறுமை
3.  கற்பு
4.  உதாரம் (தாராளம்)
5.  மட்டசனம் ( குறைவாக சாப்பிடுதல்)
6.  பிறர்சினேகம்
7.  சுறுசுறுப்பு

அந்தஸ்தின் கடமைகள்

மந்திரங்கள் படியாமலிருந்தது; ஞான உபதேசத்திற்கு வராமலிருந்தது; பாடங்களைச் சரியாய்ப் படியாமலிருந்தது; வேலைகளைச் சரியாய்ச் செய்யாமல் போனது; குடும்பத்துக்குரிய கடமைகளை செய்யாமல் போனது; புருஷன் தன் பெண்சாதியையும், பெண்சாதி தன் புருஷனையும் சிநேகியாமல் போனது.

மனத்துயர் செபம் 

(குரு பொறுத்தல் ஆசீர் வழங்கும் போதே கீழ்கண்ட மனத்துயர் செபம் சொல்லுக.)

என் இறைவா, நன்மை நிறைந்தவர் நீர். அனைத்துக்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.

உமது அருள் துணையால் நான் மனந்திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொண்டிருக்கிறேன்.

எங்கள் மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

ஆத்தும சோதனைக்குப் பின் ஜெபம்

சர்வேசுரா சுவாமி! தேவரீர் அடியேனை உண்டாக்கிக் காப்பாற்றி வருகிறதும் அல்லாமல், நான் செய்த பாவ அக்கிரமங்களைப் போக்கும் படியாய் உமது ஏக திருக்குமாரன்தானே மானபங்கமாய் மரணமடையும்படி சித்தமானீரே.  நான் பாவ அக்கிரமங்களையெல்லாம் முழுதும் அருவருத்து, அவைகளை என்றென்றைக்கும் விலக்கும்படி தயவு செய்தருளும்.  ஆமென்.

சர்வேசுரா சுவாமி!  தேவரீர் அளவில்லாத சகல நன்மை நிறைந்தவராயிருக்கிற படியினாலே, எல்லாத்தையும் பார்க்க உம்மை நான் முழுமனதோடே சிநேகிக்கிறேன்.  உமக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனென்கிறதினால், மிகவும் துக்கப்பட்டு மனஸ்தாபப்படுகிறேன். பின்பும் தேவரீருடைய உதவியைக் கொண்டு இனி ஒருக்காலும் ஒரு பாவமும் செய்வதில்லையயன்றும், இதுவரையிலும் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணுவேனென்றும் கெட்டியான பிரதிக்கினை செய்கிறேன்.  ஆமென்.